Friday, November 14, 2008

மரணமே நீ நிஜமில்லை...


எந்த வயதிற்க்கும்

ஜுரணமாகாத

அஜுரணமே

மரணமே

உனக்கு மனமில்லையா ? ? ?

பிறப்பென்றால்

இறப்பும் உண்டென்ற

நியதி அறிவோம்

ஆனால் உனக்கு

நியாயமான நியதி

இல்லையா ? ? ?

பாசம் என்ற

வலையில்

மனிதனைப் பின்னியது

ஏன் ? ? ?

தாய் தந்தை குழந்தை

என்ற கோயிலை

அறிவாயா ? ? ?

இறைவா

படைப்பின் பரம்பொருளே - எம்

உருவங்களை

உருமாற்றினாய்

ஆயுள் ரேகைகளையாவது

ஒன்றாய் வைத்திருக்கலாமே ? ? ?

கடமை கண்கண்ட தெய்வம் - உன்

கடமையாற்றுமுன் - உன்

வசம் வருவோரின்

கடமையை எண்ணிணாயா ? ? ?

பாசக் கயிற்றால்

பாசத்தை அழவைத்து

பார்க்க உன்னால்

எப்படியடா முடிந்தது ? ? ?

உனை மலர்

கொடுத்து வரவேற்கும்

நொடியில் - உன்

வருகை அமைந்திருந்தால்

பல உள்ளங்களில்

உனக்கும் கோயில்கள்

உருவாகலாம் . . .

நீ ஜெயித்து விட்டதாய்

ஒருபொழுதும் எண்ணாதே

உன்னிலும் உயர்ந்த சக்தி

எம் நினைவுகளென்று தெரியாதோ ? ? ?

உடலையும் உயிரையும் - உன்

வசம் கொண்டாலும்

நினைவுக்கு நாள் குறிப்பாயா ? ? ?

ஆம் - என்றால்

வாகைமலரை

நான் சூடுகிறேன் . . .

மனமில்லா

மரணமே நீ நிஜமில்லை...

Thursday, July 3, 2008

தேடல்

*இல்லாததை
எண்ணி ஏங்கும்
நொடி
தேடலின் ஜனனம்
*அமைதிப் பூங்காவில்
அமைதி
தேடல்...
*மனிதனிடத்தில்
மனிதநேய
தேடல்
*இறையின் பிரதிநிதிகளே
இறையைத் தேடும்
அவலம்...
*இந்திய ஒருமைப்பாட்டைக்
குலைத்து
ஆதாயம் தேடும்
புல்லுருவிகள்
*விண்ணையும் மண்ணையும்
துளைத்து சாதனை
படைக்கும்
சாதனை பறவைகளே...
முதலில்
உம்மை தேடுங்கள்...
*விடியலைத்தேடி
மக்கள் கூட்டம்...
*மனிதனே,
நீ . . .
செல்ல செல்ல
தொலைந்து நிற்கும்
தொலைவில் நிற்கும்
தொடுவானம்
தேடல்...
*தேடல்...தேடல்...தேடல்...
வாழ்வே தேடல் . . .
வாழ்வின்
ஆதியும்
அந்தமும் தேடல்...
*தேடி தேடி...
உனை இழந்தது போதும்...
துயரக் குழிக்குள்
உழன்றது போதும்...
பரம்பொருள் பாதமதில்
தஞ்சம் புகுந்திடு
உன் அத்தனை தேடலின் . . .
வினாவும் விடையும்
அவனே . . .
*உன் தேடலால்
நாளைய விடியல்
விடியலாய் அமையட்டும் . . .

மௌனம்(புயலுக்குப் பின்னே அமைதி)

* நீயும்
நானும்
சந்திக்காத வேளே
இதயத்தில் புயல்
* சந்தித்தபோது
புயல் வந்து சென்ற
அறிகுறி - ஆம்
நம் மௌனம்...

Tuesday, April 22, 2008

புதுக்(க)விதை

நான்
எதுகை,மோனை,யாப்பை
நினைந்து
அறைக்குள் அடங்கி
இருளில் துயின்றவனைத்
தட்டி எழுப்பிய
கொட்டுமுரசு

தமிழுக்கும்
வாழ்வியலுக்கும்
புதுப்பரிணாமம் . . .
பளிச்சிடும் கருத்துமின்னல்
சிந்தனைத்துளிகளின் பெருமழை...

சொற்சித்திரங்களின்
சுந்தரச்சோலை
பசி வந்த கிளிகளெல்லாம்
பறந்து வரும்
சுதந்திரச்சோலை...

கன்னித்தமிழுக்கு எழில்
மானிடப்பண்புகளுக்கு
கருத்தாழமிக்க உரம்
சிந்தனைகளின் பிம்பம்
இதயத்துடிப்பின் மருந்துச்சீட்டு

இதய உணர்வுகளை
வாழ்க்கை நிகழ்வுகளை
உணர்ச்சி பொங்கக் கூறிடும்
எரிமலை...
பனிமலை...

மனிதனே,
நான் - உன்
வானவில் எண்ணங்களுக்கு
வண்ணம் பூசிடும்
மாயாஜால மந்திரவாதி

தன்னம்பிக்கையின்
இயங்குசக்தி
மக்கள் விழிப்புணர்வுக்கு
முதல் முகவரி...
சிப்பிகளில்லா முத்து

என்,
கருத்துக் களஞ்சியம்
தேசிய விருதுக்கும் வழிகாட்டி...
என் வளர்ச்சி
ஹைகூவின் பிறப்பு

நெற்றிக்கு திலகம்
வில்லுக்கு விசயன்
சொல்லுக்கு அநுமன்
பாட்டுக்குப்புதுக்கவிதை
நான்
புதுக்கவிதை
புது(க)விதை
வழிகாட்டி . . .

புது கவிதாயினி

தன் எண்ணங்களுக்கு
வண்ணம்தீட்டி
பிரசவித்தாள்
பிரபலங்கள் பார்த்தால்
புத்தகமும் பிரபலமாகும்...

பிரசவித்தும்
அவளுக்குள் பிரசவ வலி
வலிக்கு நிவாரணம்
வாசகரே - உம்
வாசகங்கள்தான்...

உம் கண்கள்
எம் படைப்பு
நோக்கினால்
விடியல் பிறக்கும்...
உம்
எண்ணங்கள் வாசகங்கள்...
எனும்
நடைவண்டி பற்றி
நடைபயில காத்திருக்கிறாள் ...

புதியதை வரவேற்றுப்பார்
புத்துலகம் படைக்கலாம்
புதுகவிதாயினிகளையும்
வளரவிடுங்கள்
நாளைய நோபல் பரிசுக்குரிய
கவிதைகளை இழந்துவிடாதீர்கள்...

கவிதை
ஒரு பஞ்சாங்கம்
நாளைய உலகை
கணித்து காட்டும் பஞ்சாங்கம்...

Thursday, April 17, 2008

தண்ணீர்த் தாண்டவம்

சிவ சிவ உன் கோபம்

ருத்ரதாண்டவம்

பூமித்தாய்க்கு

பூகம்பம்

அக்னி தேவனால் கும்பகோணம்

துன்பகோனம்...

என் அழகிய அலைமகளும்

பெயர்சூட்டிக் கொண்டாள்

சுனாமி...என்று

கடல் அன்னையே

அலைமகளே - உன்

மெல்லிய இசை கேட்ட

இடங்களில் உன்

குழந்தைகளின் அழுகுரல்

உப்பிட்டு வளர்த்தவளே

உயிர்குடிக்க

நினைத்தது

நியாயமா ? ? ?

அலைமகளே - உனை

தோழனென்றவனை

ஏமாற்றியது

எவ்வகை ? ? ?

புத்தாண்டை சோகமாக்கியவளே

பேராழியே !

பேரழிவை தந்தவளே

உன்னால் மகிழ்த்த வந்த

பண்டிகைகளெல்லாம்

துன்பமானதே...

உன் கரையோர

மணலின் ஈரம் - உன்

நெஞ்சில் இல்லையா ? ? ?

பற்பல பொருள்

தந்தவளே அதற்கு

விலை

எம் மானுடர் உயிரோ ? ? ?

கவலை மறந்து

உனை இரசித்தவனை

ருசிக்க நினைத்தது

நியாயமா ? ? ?

கரையை மட்டும்

தழுவியவளே

மனிதஉயிரைத்தழுவியது ஏன் ? ? ?

இலட்சியங்களை

பகிரவந்த நண்பனையும்

அன்னை மடியென

ஆடிய குழந்தைகளையும்

உன் கோரப்பசிக்கு

இரையாக்கினாயே !

ஊருக்கு ஒரு இடுகாடு

உன் தாண்டவத்தால்

ஊரே இடுகாடு...

எத்தனை யுகங்கள் காத்திருந்தாய் தாயே.? ? ?

உன்னில்

உவர்ப்பு தன்மை

குறைந்ததென்றெண்ணி

எம் கண்ணீரின் உவர்ப்பைப்பெற

இத்தாண்டவமா ? ? ?

இல்லை

அன்னையே என்றழைத்த

குழந்தையை வாரி அணைத்திட

நினைத்த பாசத்தின்

உச்ச நிலையா ? ??

உன் பேரலையை

எம் பேரிழப்பைப்

பார்த்த கண்கள் சொரிந்த

கண்ணீரின் ஆழம்

ஆழியே ...

உன் ஆழத்தினும் அதிகம்

அன்னையே - உன்

பசியாற்றிய

குழந்தைகளுக்காக

இனி வாழும்

குழந்தைகைள

வாழவிடு தாயே

வாழவிடு

Wednesday, April 16, 2008

விடையின்றி வினா

நான் செல்லும்

வழிகளில் - என்

விழிகள் உனை

மட்டும் தேடுவது

ஏன் ? ? ?

எண்ணற்றவரோடு உரையாடுகிறேன்

உன் வார்த்தைகளுக்கு

மட்டும்

அர்த்தம் தேடுவது

ஏன் ? ? ?

உன் அருகாமையில்

வந்த நினைவுகளினும்

உன் பிரிவில்

அதன் எண்ணிக்கை உயர்ந்தது

ஏன் ? ? ?

விரும்புகிறேன் என்றவனின்

காதலை ஏற்கத் தயங்கிய

இதயம்

ஏன்...

காதலை சொல்லத் தயங்கிய

உனை நினைந்து

உருகுகிறது ? ? ?

பிரிவென்ற சொல்லுக்கு

பன்முறை செவிசாய்த்தருந்தும் - உன்

பிரிவில் மட்டும்

விழிகளுக்குள் வியர்வை

ஏன் ? ? ?