Friday, November 14, 2008

மரணமே நீ நிஜமில்லை...


எந்த வயதிற்க்கும்

ஜுரணமாகாத

அஜுரணமே

மரணமே

உனக்கு மனமில்லையா ? ? ?

பிறப்பென்றால்

இறப்பும் உண்டென்ற

நியதி அறிவோம்

ஆனால் உனக்கு

நியாயமான நியதி

இல்லையா ? ? ?

பாசம் என்ற

வலையில்

மனிதனைப் பின்னியது

ஏன் ? ? ?

தாய் தந்தை குழந்தை

என்ற கோயிலை

அறிவாயா ? ? ?

இறைவா

படைப்பின் பரம்பொருளே - எம்

உருவங்களை

உருமாற்றினாய்

ஆயுள் ரேகைகளையாவது

ஒன்றாய் வைத்திருக்கலாமே ? ? ?

கடமை கண்கண்ட தெய்வம் - உன்

கடமையாற்றுமுன் - உன்

வசம் வருவோரின்

கடமையை எண்ணிணாயா ? ? ?

பாசக் கயிற்றால்

பாசத்தை அழவைத்து

பார்க்க உன்னால்

எப்படியடா முடிந்தது ? ? ?

உனை மலர்

கொடுத்து வரவேற்கும்

நொடியில் - உன்

வருகை அமைந்திருந்தால்

பல உள்ளங்களில்

உனக்கும் கோயில்கள்

உருவாகலாம் . . .

நீ ஜெயித்து விட்டதாய்

ஒருபொழுதும் எண்ணாதே

உன்னிலும் உயர்ந்த சக்தி

எம் நினைவுகளென்று தெரியாதோ ? ? ?

உடலையும் உயிரையும் - உன்

வசம் கொண்டாலும்

நினைவுக்கு நாள் குறிப்பாயா ? ? ?

ஆம் - என்றால்

வாகைமலரை

நான் சூடுகிறேன் . . .

மனமில்லா

மரணமே நீ நிஜமில்லை...

Thursday, July 3, 2008

தேடல்

*இல்லாததை
எண்ணி ஏங்கும்
நொடி
தேடலின் ஜனனம்
*அமைதிப் பூங்காவில்
அமைதி
தேடல்...
*மனிதனிடத்தில்
மனிதநேய
தேடல்
*இறையின் பிரதிநிதிகளே
இறையைத் தேடும்
அவலம்...
*இந்திய ஒருமைப்பாட்டைக்
குலைத்து
ஆதாயம் தேடும்
புல்லுருவிகள்
*விண்ணையும் மண்ணையும்
துளைத்து சாதனை
படைக்கும்
சாதனை பறவைகளே...
முதலில்
உம்மை தேடுங்கள்...
*விடியலைத்தேடி
மக்கள் கூட்டம்...
*மனிதனே,
நீ . . .
செல்ல செல்ல
தொலைந்து நிற்கும்
தொலைவில் நிற்கும்
தொடுவானம்
தேடல்...
*தேடல்...தேடல்...தேடல்...
வாழ்வே தேடல் . . .
வாழ்வின்
ஆதியும்
அந்தமும் தேடல்...
*தேடி தேடி...
உனை இழந்தது போதும்...
துயரக் குழிக்குள்
உழன்றது போதும்...
பரம்பொருள் பாதமதில்
தஞ்சம் புகுந்திடு
உன் அத்தனை தேடலின் . . .
வினாவும் விடையும்
அவனே . . .
*உன் தேடலால்
நாளைய விடியல்
விடியலாய் அமையட்டும் . . .

மௌனம்(புயலுக்குப் பின்னே அமைதி)

* நீயும்
நானும்
சந்திக்காத வேளே
இதயத்தில் புயல்
* சந்தித்தபோது
புயல் வந்து சென்ற
அறிகுறி - ஆம்
நம் மௌனம்...

Tuesday, April 22, 2008

புதுக்(க)விதை

நான்
எதுகை,மோனை,யாப்பை
நினைந்து
அறைக்குள் அடங்கி
இருளில் துயின்றவனைத்
தட்டி எழுப்பிய
கொட்டுமுரசு

தமிழுக்கும்
வாழ்வியலுக்கும்
புதுப்பரிணாமம் . . .
பளிச்சிடும் கருத்துமின்னல்
சிந்தனைத்துளிகளின் பெருமழை...

சொற்சித்திரங்களின்
சுந்தரச்சோலை
பசி வந்த கிளிகளெல்லாம்
பறந்து வரும்
சுதந்திரச்சோலை...

கன்னித்தமிழுக்கு எழில்
மானிடப்பண்புகளுக்கு
கருத்தாழமிக்க உரம்
சிந்தனைகளின் பிம்பம்
இதயத்துடிப்பின் மருந்துச்சீட்டு

இதய உணர்வுகளை
வாழ்க்கை நிகழ்வுகளை
உணர்ச்சி பொங்கக் கூறிடும்
எரிமலை...
பனிமலை...

மனிதனே,
நான் - உன்
வானவில் எண்ணங்களுக்கு
வண்ணம் பூசிடும்
மாயாஜால மந்திரவாதி

தன்னம்பிக்கையின்
இயங்குசக்தி
மக்கள் விழிப்புணர்வுக்கு
முதல் முகவரி...
சிப்பிகளில்லா முத்து

என்,
கருத்துக் களஞ்சியம்
தேசிய விருதுக்கும் வழிகாட்டி...
என் வளர்ச்சி
ஹைகூவின் பிறப்பு

நெற்றிக்கு திலகம்
வில்லுக்கு விசயன்
சொல்லுக்கு அநுமன்
பாட்டுக்குப்புதுக்கவிதை
நான்
புதுக்கவிதை
புது(க)விதை
வழிகாட்டி . . .

புது கவிதாயினி

தன் எண்ணங்களுக்கு
வண்ணம்தீட்டி
பிரசவித்தாள்
பிரபலங்கள் பார்த்தால்
புத்தகமும் பிரபலமாகும்...

பிரசவித்தும்
அவளுக்குள் பிரசவ வலி
வலிக்கு நிவாரணம்
வாசகரே - உம்
வாசகங்கள்தான்...

உம் கண்கள்
எம் படைப்பு
நோக்கினால்
விடியல் பிறக்கும்...
உம்
எண்ணங்கள் வாசகங்கள்...
எனும்
நடைவண்டி பற்றி
நடைபயில காத்திருக்கிறாள் ...

புதியதை வரவேற்றுப்பார்
புத்துலகம் படைக்கலாம்
புதுகவிதாயினிகளையும்
வளரவிடுங்கள்
நாளைய நோபல் பரிசுக்குரிய
கவிதைகளை இழந்துவிடாதீர்கள்...

கவிதை
ஒரு பஞ்சாங்கம்
நாளைய உலகை
கணித்து காட்டும் பஞ்சாங்கம்...

Thursday, April 17, 2008

தண்ணீர்த் தாண்டவம்

சிவ சிவ உன் கோபம்

ருத்ரதாண்டவம்

பூமித்தாய்க்கு

பூகம்பம்

அக்னி தேவனால் கும்பகோணம்

துன்பகோனம்...

என் அழகிய அலைமகளும்

பெயர்சூட்டிக் கொண்டாள்

சுனாமி...என்று

கடல் அன்னையே

அலைமகளே - உன்

மெல்லிய இசை கேட்ட

இடங்களில் உன்

குழந்தைகளின் அழுகுரல்

உப்பிட்டு வளர்த்தவளே

உயிர்குடிக்க

நினைத்தது

நியாயமா ? ? ?

அலைமகளே - உனை

தோழனென்றவனை

ஏமாற்றியது

எவ்வகை ? ? ?

புத்தாண்டை சோகமாக்கியவளே

பேராழியே !

பேரழிவை தந்தவளே

உன்னால் மகிழ்த்த வந்த

பண்டிகைகளெல்லாம்

துன்பமானதே...

உன் கரையோர

மணலின் ஈரம் - உன்

நெஞ்சில் இல்லையா ? ? ?

பற்பல பொருள்

தந்தவளே அதற்கு

விலை

எம் மானுடர் உயிரோ ? ? ?

கவலை மறந்து

உனை இரசித்தவனை

ருசிக்க நினைத்தது

நியாயமா ? ? ?

கரையை மட்டும்

தழுவியவளே

மனிதஉயிரைத்தழுவியது ஏன் ? ? ?

இலட்சியங்களை

பகிரவந்த நண்பனையும்

அன்னை மடியென

ஆடிய குழந்தைகளையும்

உன் கோரப்பசிக்கு

இரையாக்கினாயே !

ஊருக்கு ஒரு இடுகாடு

உன் தாண்டவத்தால்

ஊரே இடுகாடு...

எத்தனை யுகங்கள் காத்திருந்தாய் தாயே.? ? ?

உன்னில்

உவர்ப்பு தன்மை

குறைந்ததென்றெண்ணி

எம் கண்ணீரின் உவர்ப்பைப்பெற

இத்தாண்டவமா ? ? ?

இல்லை

அன்னையே என்றழைத்த

குழந்தையை வாரி அணைத்திட

நினைத்த பாசத்தின்

உச்ச நிலையா ? ??

உன் பேரலையை

எம் பேரிழப்பைப்

பார்த்த கண்கள் சொரிந்த

கண்ணீரின் ஆழம்

ஆழியே ...

உன் ஆழத்தினும் அதிகம்

அன்னையே - உன்

பசியாற்றிய

குழந்தைகளுக்காக

இனி வாழும்

குழந்தைகைள

வாழவிடு தாயே

வாழவிடு

Wednesday, April 16, 2008

விடையின்றி வினா

நான் செல்லும்

வழிகளில் - என்

விழிகள் உனை

மட்டும் தேடுவது

ஏன் ? ? ?

எண்ணற்றவரோடு உரையாடுகிறேன்

உன் வார்த்தைகளுக்கு

மட்டும்

அர்த்தம் தேடுவது

ஏன் ? ? ?

உன் அருகாமையில்

வந்த நினைவுகளினும்

உன் பிரிவில்

அதன் எண்ணிக்கை உயர்ந்தது

ஏன் ? ? ?

விரும்புகிறேன் என்றவனின்

காதலை ஏற்கத் தயங்கிய

இதயம்

ஏன்...

காதலை சொல்லத் தயங்கிய

உனை நினைந்து

உருகுகிறது ? ? ?

பிரிவென்ற சொல்லுக்கு

பன்முறை செவிசாய்த்தருந்தும் - உன்

பிரிவில் மட்டும்

விழிகளுக்குள் வியர்வை

ஏன் ? ? ?

இளைய தலைமுறையே திரண்டு வா...

மனம் கவர்ந்த
கன்னியருக்கும்
கண்ணன்களுக்கும்
ஏவுகணை செலுத்தி ஓய்ந்த
இளையதலைமுறையே...
வலுவிழந்த - உன்
பாரதத்தை
வலுவூட்ட . . .
இளையதலைமுறையே இணைந்து வா...

மின்மினி பூச்சிகளின்
மின்னல் வெளிச்சம்
நிலாப்பெண் வருகை
பதிவாகவில்லை...
ஆனால் ,
பௌர்ணமியாய் பிரகாசித்த ஓர் இடம்
அருகில் சென்றேன்
பாரத அன்னையைக்கண்டேன்...
சற்றே மெய் சிலிர்த்துப்போனேன்...

தாமரையாம்
அவள் கரங்களில்
வீரப்பால் . . .
விண்மீன்களாம்
அவள் விழிகளில்
ஏக்கம்...

அவள் காத்திருப்பது
அஹிம்சாவாதி காந்தி...
வீரமகள் ஜான்ஸிராணி...
குருதிகொட்டிய கட்டபொம்மனுக்காக
அல்ல...

அன்னையவள்
காத்திருப்பு
காக்கப்போகும்
இளையதலைமுறையே ...
உனக்காக...

பாரத வீதியில்
பாலும்
தேனும்
ஓடிட
ஒற்றுமை மலர்கள்
புன்னகைத்திட
இளையதலைமுறையே விரைந்து வா...

அன்னையவள் கண்ட கனவு
நெனவாக
இளையதலைமுறையே திரண்டு வா...

ஏந்திழையே...

அன்பெனும் காவியமே
பண்பெனும் புத்தகமே
பிரம்மன் தீட்டிய எழிலோவியமே...
நெருப்பின் காம்பில்
பூக்கள் பூத்திட
ஏந்திழையே
எழுந்திடு...

கைவளை விரலிடுக்கில்
சாதம் படைத்தது போதும்
சாதனை படைத்திடு...
இருளை அகற்ற
விவாதித்தது போதும்
விளக்கேற்று...

வஞ்சக வலையில்
கயல் சிக்கலாம்
கயல்விழியை ஒப்பவளே
நீயுமா ? ? ?

சரித்திரம் படைக்க
வந்தவளே
தரித்திரம் ஆகிவிடாதே...

தடைகளை தகர்த்தெறி ...
உனக்குள் இப்பிரபஞ்சத்தை
விதைத்துக்கொள்...
பிரபஞ்சத்தின்
கருவறையே...
நீ இல்லையேல் இப்பிரபஞ்சம் இல்லை.....

Tuesday, April 15, 2008

பிரிவு நிரந்தரமல்ல

இறைவா
சந்திக்க வைத்தாய்
சந்தோஷமாய்
நாட்கள் ஓடின...
ஒவ்வொரு நாளும்
பிரிவின் வருகை
என்றறியாமல் . . .
நினைவுகளோடு
பிரிய மனமின்றி
பிரிவை
சந்தித்தோம்
விழிகளால் சந்தித்து
இதழ்களால் உறவாடும்
பயணம் இனி இல்லை...

இதயம்தனில்
பயணம்
நிதம் நிதம் தொடரும் . . .
ஓயாமல் சுற்றும்
பூமியில்
நாமும் சுற்றுவோம்
மானிடத்தேனீயாய்

உழைப்பால் உயர்வோம்
சாதனைகள் படைப்போம்
மீண்டும் சந்திப்போம் - என்ற
விதைவிதைத்து
நம்பிக்கையோடு
விடைபெறுவோம்...
பிரிவு நிரந்தரமல்ல...

மூன்றெழுத்து

மனம் என்ற
மூன்றெழுத்தை
உனக்குள் வை . . .
அமைதி என்ற மூன்றெழுத்து
உனக்கே உனக்கு...

தோல்வி என்ற
மூன்றெழுத்தை
தாங்கிப்பார்...
வெற்றி என்ற
மூன்றெழுத்து விரைந்திடும் . . .

காதல் என்ற
மூன்றெழுத்தில்
கலந்து
கல்வி என்ற
மூன்றெழுத்தை
மறவாமலிரு . . .
இத்தனையும் செய்துபார்

வெற்றி என்ற மூன்றெழுத்திற்கும்
மகிழ்ச்சி என்ற ஐந்தெழுத்திற்கும்
மத்தியில் - உன்
"வாழ்க்கை" என்ற நானகெழுத்து மணம் வீசிடும்...

நட்பா ? காதலா ?

நம் பால்ய
ஸ்நேகத்தில் . . .
இரசித்தனர்
ஒற்றுமையை

நாம் வளர்ந்தோம்
நம் நட்பும்...
அதற்குத்
தடையும்...

நண்பன் என்றேன்
நட்பாய் பழகுவதும்
காதலாய் கனிவதும்
இயல்பே ,
உரைத்தது சமூகம்
என் மனமோ
முரண்பட்டது - உனை
வினவினேன்
நீயோ
இருதலைக்கொள்ளியாய்
என் முன்...

மௌனம் கலைந்திடு
நட்பெனும் புனிதத்தோடு
காதலெனும் தூய்மையை
இணைத்து கொச்சப்படுத்தாமலிருக்க
நட்பா ? காதலா ?
முடிவெடு

சா(தி)தீ

ஏட்டிலோ
சாதிகள் இல்லையடி பாப்பா - ஆனால்
ஏட்டைப் படிக்க
சா(தி)தீச்சான்றிதழ் . . .

மானிட வாழ்வின்
அணையா தீ சா(தி)தீ
இறையின் படைப்புகளே
அன்பென்ற பாலை ருசித்து
சுவை மாறும் முன்
பாலூற்ற நினைப்பது
எவ்வகை ? ? ?

சா(தி)தீயை அணைத்திட
உருவெடுத்த இயந்திரங்களே...
இளையதலைமுறைகளே . . .
தீயணைப்பு இயந்திரமாக
மாறுவது என்று ? ? ?

புதிதாய் பிறந்தோம் . . .

கருவறையாம் கருப்பையில்
துயில் கொண்டு
வையகம் கண்ட நொடியில்
புதிதாய்ப் பிறந்தோம்...

அன்னை தந்தை
அறிந்த நொடியில்
புதிதாய்ப் பிறந்தோம்...

நட்பின் மகத்துவம்
காதலின் இலக்கணம்
அறிந்த நொடியில்
புதிதாய்ப் பிறந்தோம்...

புறஅழகை வெறுத்து
அகஅழகை
உணர்ந்த நொடியில்
புதிதாய்ப் பிறந்தோம்...

ஒவ்வொரு நாளும்
நொடியும் புதிதாய் பிறந்தோம்...

உன் ஆழ்சொப்பனமும்
உனக்கு ஓர் புதிய ஜனனமே . . .

காதல் பெரிதா?

ஈரைந்து மாதம்
உனைச்சுமந்து - தன்
உதிரத்தை உணவாக்கிய
அன்னையினும் உன்னவளின்
காதல்பெரிதா ? ? ?
உன்னவளை நினைந்து
உருகி வடிக்கும் - கவிதையின்
ஒவ்வொரு துளி மையிலும் - உன்
தந்தையின் . . .
உதிரம் தெரியவில்லையா ?
உன் காலணியின்
விலையோ 1000 - உன்
தந்தையின் காலணியிலோ
1000 தையல்...
இவைகள் கண்டும்
கற்கும் வயதில்
உன் மனதில்
காதல் மலர்கிறதா ? ? ?
காதல் பெரிதா ? ? ?

கருகும் மொட்டுகள்

உலகின் ஒளியே

ஞாயிறே

உனைக் காணாத விழிகளும்

இப்புவியில் உண்டோ ?

உன் வருகைக்கு முன்

அவர்கள் வருகை

பதிவானால் மட்டுமே

உண்ண உணவு...

சிறார் தொழிலாளர் ஒழிப்பு

நூலின் தலைப்பு

நுலை கையிலேந்தி

விலை கூவுகிறான்

10 வயது சிறுவன் . . .

சந்திரன் வருகை

அவர்களுக்கு ஆனந்தம்

நிலாச்சோறுக்கு அல்ல

இல்லம்தனில் தடம் பதிப்பதற்கு..

புத்தக சுமை

தூக்கி சுகம் காண

ஏங்கும் தோள்கள்..

எத்தனை எத்தனை? ? ?

எத்தனை கனவுகள் ?

அத்தனையும் காற்றோடு போக

அக்னிக்குஞ்சுகள்

அக்னி குண்டங்களில்

எழுதுகோல் பற்ற வேண்டிய பிஞ்சு விரல்கள்
கந்தகச் சாலையில்...

பிஞ்சு நெஞ்சங்களின

குமுறல்கள் - உங்கள்

நெஞ்சங்களை எட்டவில்லையா ?

1000 1000 சிறார்களின்

கதறல்கள் உங்கள்

செவிகளை பிளக்கவில்லையா ?

நாட்டின் செல்வங்களை

முத்துக்களை

காத்திட விரைந்திடுவீர் இன்றே...


அறிவியல் காற்றின் ஆயுளே...

அறிவியல் காற்றில்
தோய்ந்து
பூமிதனில் சொர்க்கத்தைப்புலரவைக்கும்
அறிவியல் அறிஞன்
அப்துல் கலாமே
உமக்கு
நூறு கோடி மக்களின் சலாம் !. . .

தென்கோடியில் அவதரித்தாய்
சந்தர்ப்பத்திற்காய் காத்திராமல்
சந்தர்ப்பங்களை உருவாக்கி
சோதனையிலும்
சாதனனை படைத்திட்ட
முதல்வனே...

வறுமை வாட்டி வதைத்தாலும்
நந்தி கருவிலே அழிந்தாலும் - உன்
நம்பிக்கை அழியவில்லை
ராட்டோ கைவிடப்பட்டாலும்
ரணத்தை மனதில் ஏற்காத
மாணிக்கமே...

அக்னி சிறகுகள்
தரித்த
விஞ்ஞான சாம்ராஜ்ஜியத்தின்
மன்னரே. . .
கனவுகளில் வாழ்வதைவிட
கனவுகளால் வாழ வழி தந்த
இந்தியாவின் இமயமே
இளைஞர்களின் இதயமே

சிரசை சிந்தனையால்
செவிகளைக் கேள்விஞானத்தால்
தழ்களைப் புன்னகையால்
ஈர்க்கும் விழிதனைக் கருணையால்
அலங்கரித்த
தெய்வீக அழகனே !

உன் . . .
இலட்சியங்கள் தடைப்பட்டாலும்
இடிபாடுகளக்குள்ளே
பொன்னான வாய்ப்புத் தேடி
மண்ணுக்கும் விண்ணுக்கும்
ஏவுகணை பாலம் அமைத்த அக்னிக்குஞ்சே !
இனிமையின் இலக்கணமே
எளிமையின் எழில் குன்றே

புன்சிரிப்பின் பூர்வீகமே
பொன்னுலகின் பகலவனே
பொறுமையின் பொற்பாதமே . . .
நாளிதழ்களின் நாயகனே !
நாளைய பிரபஞ்சத்தின் கருவறையே !
தோல்வியெனும் பாகற்காயில்
வெற்றியெனும்
பஞ்சாமிர்தம் படைக்கும் கலைஞனே !
சாதிபேதம் ஒழிந்திட . . .
சமத்துவம் நிறைந்திட
மனிதநேயம் மலர்ந்திட
அன்பு நெறி காட்டி
இன்ப நிலை கூட்டி
துன்பநிலை கழித்து
நம்பிக்கை தீபமேந்தி
நீ நடக்கிறாய்
இதோ
என் கண் முன்னே
எதிர்கால பாரதம் தெரிகிறது - ஆம்
புதுபாரதம் புத்துயிர் பெறுகிறது...

முரண்

மறந்துவிட்டேன்

என்று

உச்சரிக்கும்

இதழ்கள் - ஆனால்
ஒவ்வொரு

துடிப்பிலும்

உன் பெயர் சொல்லும்

இதயம்

கருவறையின் உயிரே...

கருவிற்கு உயிர் தந்த
கண்ணின் இமையே...
உன் உதிரம் சிந்தி
உழைத்திட்டாய்...

எனை ஊரார் போற்ற
வளர்த்திட்டாய்...
என் புன்சிரிப்பில்
பசியாறிய உனக்கொரு
கவி பாடாமல் - என்
புலைம நிறைவுறுமோ ?

கடிந்த பேசாது
கட்டுக்கோப்பாய் வளர்த்தாய்...
காலங்கள் பலவானாலும்
யுகங்கள் பல கடந்தாலும் உனை
மறவேன்...
எத்தனை ஜென்மங்கள்
தரித்தாலும்
தவமாய் தவமிருந்து

தந்தையாய்

உனை பெறுவேன். . . .

உயிர்த்தவளே...

**கருவறையாம்

கருப்பையில் சுமந்தவளே...

**ஈரைந்து மாதம்

வயிற்றில் சுமந்தாய்...

**ஆயுள் முழுவதும்

இதயத்தில் சுமக்கிறாய் - உன்

உதிரத்தை எனக்கு

உணவாக்கினாய்...

**கண்களால் காணும் தெய்வமே...

உன் அன்பிற்கு அளவுகோலா ?

படைப்பின் பரம்பொருளாம்

பிரம்மனுக்கும்

படைக்க முடியா கருவி...

**உனக்கும் எனக்கும்

ஆயுள்ரேகை ஒன்றாகாதோ ?

**ஈரேழு ஜென்மம் தரித்தாலும் - உனக்கே

மகளாக மாட்டேனோ???

Monday, April 14, 2008

சுமங்கலி

விட்டுச்சென்றாய் எனை

சுமங்கலியானது - என்

டைரியின் வெள்ளைத்தாள்கள்.....

இதயமொழி


என் இதழ்கள் மௌனமானால் என்ன ?

எனை நேசிக்க தெரிந்த

உனக்கு.....

உன்னையே சுவாசித்த என்

இதயத்தின் இதயமொழி....

புரியவில்லையா? ? ?

காதல்

காதல்

புனிதமானது..

நீ புனிதத்தோடு வாழும்வரை...

ஆழமானது

நீ அன்போடு இருக்கும்வரை..

புரியாதபுதிர்

பக்குவம்பெரும்வரை...

எந்த ராகம்?

அமிர்தவர்ஷினி ராகத்திற்கு
மழை அடிமை...
மகுடியின் ராகத்திற்கு
பாம்பு அடிமை...
ஆனால்...
எந்த ராகத்திற்கடா
வன்முறை அடிமை?